எனது மகனை கொலை செய்தது போல் அவரது மகளையும் கொலை செய்திருக்கலாம் என கவின் தந்தை பேட்டியளித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இருவரும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில், சரவணன் தூத்துக்குடியில் வசித்து வந்தபோது, இவரது மகளுக்கும், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் (26) காதலித்துள்ளனர். தற்போது கவின் குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சரவணனின் மகளும், கவின் குமாரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இதற்காக கவின் குமார் ஏரலில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்து காதலியை சந்தித்துவிட்டு செல்வார் என கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் சரவணன் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. கவின் குமார் பழங்குடியின சமூகம் என்பதால் சரவணன் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனால் கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். நேற்று இதுபற்றி தகவல் தெரிந்ததும் காதலியின் சகோதரர் சுர்ஜித் கவின்குமாரை சந்தித்து பேசுவதற்காக வந்துள்ளார். அதன்படி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்த கவின்குமாரிடம் காதலை கைவிடுமாறு பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் துடிதுடித்து கவின்குமார் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கவின் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் சரவணனின் மகன் சுர்ஜித் தான் கவின் குமாரை அரிவாளால் வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், ஆணவக்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எனது மகனை செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் அல்லவா. அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். எனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே அவர்களை பிடித்திருக்கலாம்.
எங்களை மட்டும் இரவு நேரம் என்றும் பாராமல் வீடு புகுந்து தூக்கிச் செல்கிறீர்கள். தங்களுக்கு அரசு சார்பில் நிதி வேண்டாம். நீதி வேண்டும். இந்த கொலைகள் தொடர்புடைய குற்றவாளியின் பெற்றோரை கைது செய்யவேண்டும் என்று கவின் தந்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், சுர்ஜித்தை போலீசார் கைது செய்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.