இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியை விடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்க முடியாவிட்டால் இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும் என கூட்டு ஆடை சங்க மன்றத்தின் (JAAF) தலைவர் யோஹான் லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் சுமார் 40% அமெரிக்காவுக்கே செல்கிறது. கடந்த ஆண்டு 1.9 பில்லியன் டொலர் வருமானம் அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றாவது பெரிய அந்நியச் செலாவணி அமெரிக்காவிலிருந்தே ஈட்டப்படுகிறது.

வியட்நாம் போன்ற போட்டியாளர்கள் குறைந்த வரிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளதால் இலங்கை சிக்கலில் உள்ளது. ஆனால், நாம் பேச்சுகளை தொடர முடியும். இத்துறையில் 300,000 இற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
எனவே, இத்தொழில்துறையை பாதுகாக்க அமெரிக்காவுடன் சிறந்த உடன்பாடுகளை எட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் ஏனைய போட்டியாளர்களுக்கு சந்தை சாதகமாக மாறிவிடும் என்றும் யோஹான் லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரித் திருத்தங்களுக்கு அமைய இலங்கைக்கு 30 வீத வரி அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறவீடு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.