கண்டி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான இரண்டு மின்னஞ்சல்கள் தெற்காசிய நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 23 ஆம் திகதி மின்னஞ்சல் கண்டி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் டிசம்பர் 26 ஆம் திகதி காலைதான் மாவட்டச் செயலாளருக்கு அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்த பின்னர், அந்தத் தகவல் போலியானது என்று பொலிஸார் அறிவித்தனர்.
பின்னர், செயலகத்தில் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கியபோது, மாலை 4.00 மணிக்கு முன்னதாக வெடிப்பு ஏற்படும் என்று எச்சரித்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
மீண்டும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், பல வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் கண்டி மாவட்ட செயலகத்துக்கு விரைந்து மீண்டும் தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன் விளைவாக, பல ஊழியர்கள் அரை நாள் விடுப்பில் வெளியேறினர், இதனால் சேவைகளுக்காக வந்த பொதுமக்களுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
