இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக ஏற்படும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நாடுகள் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதனைப் பின்பற்றி இலங்கையிலும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை முழுமையாகத் தடுத்தல் மற்றும் சமூக ஊடகப் பிரவேசத்தைத் தடை செய்தல் குறித்து தற்போது ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
