சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனத்தைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மொத்தமாக ரூபா 130,000 தண்டப்பணம் செலுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (25) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய குறித்த வாகனத்தை அரசுடமையாக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.
முதலாவதாக ரூபா.5,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ரூபா.100,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 06 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதற்கு மேலதிகமாக, இந்தக் குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையை 05 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
மூன்றாவதாக ரூபா.25,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 03 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
