கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட வீரமறவர்களின் நினைவு வளைவு, மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று (25.11.2026) அதிகாலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள பதிவில் மேலும்,
கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட வீரமறவர்களின் நினைவு வளைவு, எமது இளைஞர்களின் முழுமையான முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் வீரமறவர்களின் நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது என்பதை எம்மவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இது வெறும் நினைவு வளைவு அல்ல; எம் மண்ணுக்காக உயிர் துறந்த வீரமறவர்களின் நினைவுகளையும், அவர்களின் தியாகத்தையும் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பதிவு என குறிப்பிட்டுள்ளார்.
