இன்று முதல் பொது இடங்களில் வெற்றிலை உண்டு எச்சில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் பஸ் நிலையங்கள், தெருக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் வெற்றிலை எச்சில்கள் பரவலாக காணப்பட்டு வந்தன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அமைப்புகளிடம் புகார்கள் அளித்திருந்தனர்.

ஆனால் இதுவரை இந்த பிரச்சினைக்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் இந்த நிலையைத் தடுக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இன்றைய தினம் கம்பஹா பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3,000 அபராதமும், அதிகபட்சமாக ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் சாலையில் வெற்றிலை எச்சில் துப்புவதாக சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியதுடன், இவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
அதேபோல பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.