முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு குழுக்களும் ஒரு பொது அரசியல் கூட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிதியை மோசடி செய்ததாக கூறி கடந்த 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சஜித், ரணிலை நேரில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வந்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ரணில் தனது கட்சித் தலைமையிலிருந்து விலகுவாரா அல்லது சஜித் பிரேமதாசவை மீண்டும் தனது தலைமையின் கீழ் இணைய அழைப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த அழைப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியில் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,
“தனது கட்சிக்கு கிடைத்த அழைப்பின் பேரில் சஜித் பிரேமதாசவும் மற்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.