முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடி இருதய அறுவைச் சிகிச்சை அவசியம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
அவரது இருதயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் காரணமாக விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக தேசிய வைத்தியசாலையின் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

தேசிய வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைக்காக சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால், பிணை வழங்கப்பட்டுள்ளதால் ரணில் விக்ரமசிங்கம் விரும்பினால் தனியார் வைத்தியசாலையில் தனது சொந்த செலவில் உடனடியாக சிகிச்சை பெற முடியும் என்றும் வைத்தியர் விளக்கமளித்தார்.
தற்போது, அவருடைய கரோனரி தமனிகளில் அடைப்பு [coronary artery blockage” அல்லது “Coronary Artery Disease (CAD)] இருப்பதாகவும், மேலும் நீரிழப்பு பிரச்சினையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவரின் இருதயம் பலவீனமடைந்துள்ளதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.
இதனால், இயல்பு நிலைக்கு திரும்பச் செய்ய இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என வைத்தியர் ருக்ஷன் பெல்லன குறிப்பிட்டார்.