இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பல பிரிவினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் தளர்வுகளை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அயல் நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் திபெத்தியர்களுக்கே இவ்வாறு விசா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்விகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையான நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இந்தத் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கிடையே பயணிக்கும் குடிமக்களுக்கான அடையாளச் சான்று மற்றும் பயண விதிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்த பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் பொதுவான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
