பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மீளாய்வுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு குண்டு துளைக்காத வாகனம் மீள வழங்கப்படலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு நேற்று (12.10.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமக்கு குண்டு துளைக்காத வாகனங்களை மீள வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, குறித்த வாகனங்களை மீள வழங்கும் தீர்மானம் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனத்தை அரசாங்கம் அண்மையில் மீளப் பெற்றிருந்தது.
இவ்வாறு, குண்டு துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொள்வதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுடைய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் காணப்படுமாக இருந்தால், குறித்த வாகனங்களை மீள வழங்க முடியும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.