இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறையாகும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தற்போது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பில் இருப்பதாகக் கூறினார்.
இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் சர்வதேச பொலிஸாரின் ஆதரவுடன் இந்தோனேசிய பொலிஸாரால் குறித்த குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் அரசியல் ஈடுபடும் வரலாறு இருந்ததாகவும், இன்று அந்த சூழல் மாறிவிட்டது என்றும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அத்தகைய குழுக்கள் குறித்த சட்ட முடிவுகளை அரசியல் அழுத்தமின்றி எடுக்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
டுபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு விசேட நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.