திருகோணமலை கடற்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் குறித்த வழக்கு, பெப்ரவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

நீதவான் எம்.என்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஜனவரி 19ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது, இன்று (28) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, விளக்கமறியலை நீட்டித்து உத்தரவிட்டார்.
கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை நகரின் கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
குறித்த பகுதி கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது.
கட்டுமானத்திற்கு நகரசபை அல்லது திணைக்களத்திடம் எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை.
இதனால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
வழக்கு விசாரணையை ஒட்டி திருகோணமலை நகரம் முழுவதும் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
