கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23).
செவ்வாயன்று விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகேஷ், சிறிய ரக விமானம் ஒன்றை இயக்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அதே பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்த சவன்னா மே (Savanna May Royce, 20) என்னும் கனடா நாட்டவரான மாணவியும் விமானத்தை தரையிறக்க முயன்றுள்ளார்.
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கவனிக்காமல் ஒரே நேரத்தில் தரையிறக்க முயல, இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
மோதியதில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிய, விமானங்களில் பயணித்த சுகேஷ், சவன்னா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.