புதிய இணைப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.
இந்த பிணை மனு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

இரண்டாம் இணைப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானபோது கைதுசெய்யப்பட்டார்.
அதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் முன்னிலையாகியிருந்தார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில்உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, 16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றது.
முன்னதாகவே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.