கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் ஒரு உயர்மட்டக் கூட்டம் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

இந்த கூட்டம் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது கருத்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிகபட்ச பாதுகாப்பைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச இணைப்பில் அதன் முக்கிய பங்கையும் குறிப்பிட்டார்.
அத்துடன் பயணிகள், விமானக் குழுவினர், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு தற்போதுள்ள எதிர்வினை வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
