இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) இந்த சந்தேகநபர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.
இம்மூவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் படகு மூலம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுக்கு சென்று தங்கியிருப்பதற்கு இந்த மூவரிடமும் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இந்த மூவருக்கு எதிராகவும் பல்வேறு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் மீட்கப்பட்ட குண்டுகள் விவகாரத்திலும் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பிருப்பதாக அறியமுடிகின்றது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் (LTTE) மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
