சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய இருவர் மீது ஆவா வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நேற்று (21.12.2025) மாலை இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்ட குழு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ தினமான நேற்று(21) மாலை 6.00 மணியளவில் மாங்கேணி பகுதியில் வைத்து இருவர் மீது மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட ஆவா வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில், 40 வயதுடைய செல்வபுரம் மாங்கேணியைச் சேர்ந்த பொன்னம்பலம் ஜெயச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பொன்னம்பலம் சுரேந்திரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த இருவரும் மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
