ராஜங்கனை குடியேற்றப் பகுதியில் டிட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நஷ்டஈட்டுக் காசோலைகள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமையினால் நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16-17 திகதிகளில் நடைபெற்ற நிகழ்வின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயனாளிகளுக்கு இந்த காசோலைகளை வழங்கியதுடன், ஒரு வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
ஒரு வீட்டிற்கு 2 மில்லியன் ரூபா வீதம் தவணை முறையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், அடிக்கல் நாட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர் உட்பட பலரது காசோலைகள் போதிய நிதி இல்லாமையினால் வங்கிகளால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய விவசாயக் கூட்டமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹொரவப்பொத்தானை மற்றும் பரங்கியாவாடிய பகுதிகளில் பயிர்ச் சேதங்களுக்காக வழங்கப்பட்ட காசோலைகளும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காசோலைகளைப் பெற்ற பயனாளிகள் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
காசோலை பெற்ற 17 பேரில் 11 பேர் புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பதிலாக, தயாராக உள்ள வீடுகளை விலைக்கு வாங்க முடிவு செய்தனர்.
இதனால் புதிய விபரங்கள் கிடைக்கும் வரை கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
காசோலைகளை வங்கியில் இடுவதற்கு முன்னர், பயனாளிகள் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டும் மற்றும் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நடைமுறைகள் முடியும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் காசோலைகளை வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர்.
அரசாங்கத்திடம் போதிய நிதி உள்ளது என்றும், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தவணை முறையில் பணம் விடுவிக்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.
தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், நிராகரிக்கப்பட்ட காசோலைகளுக்குப் பதிலாகப் புதிய காசோலைகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
