எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சந்தேகநபரின் தாயார் குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பண்டாரவளை, பூனாகல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாகும்.
கடத்தப்பட்டவர் எல்லப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவியாவார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி குறித்த மாணவி பண்டாரவளையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார்.
தந்தை வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த போது சந்தேகநபரான இளைஞன் அவரைக் கடத்திச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் எல்.ஜி. பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய கூலித் தொழிலாளியாவார். அவர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொழும்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் சட்டபூர்வமான பொறுப்பாளர் அனுமதியின்றி சில வாரங்கள் மாணவியை தடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் மகள் காணாமல் போனமை குறித்து தந்தை எல்லப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வீட்டிலிருந்த மாணவியைக் மீட்டுள்ளனர்.
அதற்காக உதவி புரிந்த சந்தேகநபரின் தாயாரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான இளைஞன் பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
