பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதார நிலையை மேம்படுத்த பலவிதமான உதவிகளை வழங்கி வரும் ‘உதவும் உறவுகள்’ தொண்டு நிறுவனத்தின் 17வது ஆண்டு விழா, கடந்த மாதம் 18 ஆம் திகதி கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, துயரம் நிறைந்த தருணங்களில் மக்களுக்கு உறுதுணையாக நின்று தொடர்ச்சியாக 17 ஆண்டுகளைக் கடந்து ஆக்கபூர்வமான மக்கள் பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘உதவும் உறவுகள்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு. சுப்பிரமணியம் வெற்றிமயில்நாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், கௌரவ விருந்தினர்களாகக் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், ஓய்வுநிலை அதிபர்களான திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் மற்றும் திரு. சேதுபாண்டியர் அம்பிகைபாகன், தமிழ்ச் சங்க நிறுவனர் திரு. வேலுப்பிள்ளை இறைபிள்ளை, கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் திரு. கேதீஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் நலவிரும்பிகளும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.






























