மின்சார சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது சகோதரரை விடுவிக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே. டபிள்யூ. எஸ். எஸ். உதயகுமார (44) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பைத் துண்டிக்க வந்த ஊழியர்களை மிரட்டிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரை பார்க்க சென்ற குறித்த பிரதேச சபை உறுப்பினர், காவல்நிலையத்தினுள் நுழைந்து கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரின் கைபேசியையும் அவர் பறிக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சட்டப்பூர்வக் காவலில் இருந்த சந்தேகநபரை விடுவிக்க முயற்சித்தமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, சந்தேகநபர் மது போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
