முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்ற நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இரவு 7.45 மணியளவில் கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி அசோக ரன்வலவின் ஜீப் வண்டி விபத்திற்குள்ளாகி இருந்தது.
இந்நிலையில், அசோக ரன்வல வாகனம் செலுத்துவதற்கான உடற் தகுதியுடையவரா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ மையத்தில் அசோக ரன்வலவை முன்னிலைப்படுத்தி, அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உடற் தகுதி குறித்து பரிசோதனை செய்யுமாறு கோரியுள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளின் போது அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை, அசோக ரன்வலவின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் மதுபானம் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என அரசு பகுப்பாய்வாளர் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
