பொலிஸ் அதிகாரிகள் சிலரின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் நிதி சேகரித்த விடயங்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 400 அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் விபரங்கள் விசாரிக்கப்படவுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் சிலர், திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக கிடைத்துள்ள இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், ஐந்து பிரதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் 20 அதிகாரிகளின் சொத்து விபரங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிலர் இந்த பிரிவில் 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், அவர்களில் பலர் உரிய முறையில் சேவையை செய்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.நீண்ட காலமாக ஒரே பிரிவில் பணிபுரியும் சில அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், விசாரணைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் இவர்கள் மூலமாகவே கடத்தல்காரர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
