தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த நபர்களுக்கு ஏடு தொடக்கியவருக்கும் ஞானஸ்தானம் செய்த பாதிரியாருக்கும் அதைவிட அவமரியாதை கிடையாது.

இதில் மிகச்சிறிய தொகையினர்தான் நாகரிகமாக பதிவுகளை போடுகிறார்கள்.
அன்னபூரணி அம்மாவுக்கு எதிரான விமர்சனங்களில் ஒரு விடயத்தைத் தொகுத்து விளங்கக்கூடியதாக உள்ளது என்னவென்றால், ஒர் ஆன்மீக வழிகாட்டிக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் இவை என்ற அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவர் நிராகரிக்கப்படுகிறார். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் அதே மகிமையான அளவுகோல்களுக்குள் பொருந்திவரும் ஞானிகள்,தவசிகள்,முனிவர்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், ஆதீனத் தலைவர்கள்… எத்தனை பேர் தமிழ்ச் சமூகத்தில் உண்டு என்பதுதான்.
அன்னபூரணியின் விளம்பரம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மற்றொரு விளம்பரம் வந்தது. அது முதலில் பத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது. அது “நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனதில் துறவு வாழ்க்கைக்கு முன்வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்…”என்று தொடங்குகிறது. அதினத்தின் புதிய குரு முதல்வரை தெரிந்தெடுப்பதற்கு சன்னியாசிகளாக வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது.
அதாவது சன்னியாசிகளுக்கு, துறவிகளுக்கு இன்டர்வியூ வைக்கும் ஒரு நிலை. சன்னியாசம் என்பதே உலக பந்தங்களைத் துறப்பது. பற்றுக்களை அறுப்பது. ஆசைகளைத் துறந்த ஒரு சந்நியாசி இன்டர்வியூக்கு வருவாரா? இன்டர்வியூ எதற்காக? ஒரு மடத்தின் குரு முதல்வர் பதவிக்காக. அப்படியென்றால் சன்னியாசிக்கு குரு முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்குமா? ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுத் தலைநகரத்தின் குறியீடாகக் காணப்படும் ஓர் ஆதீனம் அதன் வாரிசுகளை உருவாக்கும் விடயத்தில் நிறுவனமயப்பட்ட ஆன்மீகத் தொடர்ச்சியை;துறவுத் தொடர்ச்சியை; தவத் தொடர்ச்சியைப் பேண முடியாமலிருப்பது என்?
யாழ்ப்பாணம் ஒரு காலம் மகிமைக்குரிய சித்தர் பாரம்பரியத்தை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துச் சித்தர் பாரம்பரியம் எனப்படுவது நகர மையச் சித்தர் பாரம்பரியம். அது யாழ்ப்பாணத்தின் “பெரிய கடைத் தெருக் களின்” தாழ்வாரங்களில் செழித்தோங்கி வளர்ந்த ஒரு ஆன்மீகப் பாரம்பரியம்.அந்த சித்தர் பரம்பரையில் தோன்றிய சித்தர்கள் யாருமே காவி உடுத்ததில்லை என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பா.அகிலன் கூறுவார். அதாவது யாழ்ப்பாணத்துச் சித்தர்களின் தனி அடையாளங்களில் அதுவும் ஒன்று. காவியையும் துறந்த சித்தர்கள். காவிக்கு பதிலாக சாதாரண வேட்டியோடு காணப்பட்டார்கள். இவ்வாறு தோன்றிய சித்தர் பாரம்பரியத்தின் கடைசி வாரிசாக மட்டக்களப்பை சேர்ந்த சன்னியாசி ஒருவர் இப்பொழுது சிவத் தொண்டன் நிலையத்தில் இருக்கிறார்.
அவரைப் போன்று வேறு சன்னியாசிகள் சமூகத்தில் இருக்கக்கூடும். உண்மையான சன்னியாசிகள் பிரபல்யமாக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அந்த ஆசை இருக்காது. ஆனால் அவர்களுடைய தவ வலிமை காரணமாக அவர்களை நோக்கி ஈர்க்கப்படும் மக்கள் அவர்களைப் பிரபல்யப்படுத்தி விடுவார்கள். தமிழ் மக்களுக்கு அது போன்ற தவ வலிமை மிக்க சன்னியாசிகள் தேவை. 2009க்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலை கையாள்வதற்கு அரசியல்வாதிகளால் மட்டும் முடியாது. மனநல மருத்துவர்களால் மட்டும் முடியாது. புத்தி ஜீவிகளாலும் படைப்பாளிகளாலும் மட்டும் முடியாது. அங்கே ஆன்மீக வழிகாட்டலும் தேவை.
அது ஒரு கூட்டுக் குணப்படுத்தல் செய்முறை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பான கூட்டு உளவியலை கையாள்வதற்கு ஆன்மீகத் தலைவர்கள் அதிகம் தேவை.ஆனால் அவ்வாறான தலைவர்கள் பற்றாக்குறைவாக இருப்பதைத்தான் அவ்வாறான தலைவர்களுக்கு நேர்காணல் வைக்க வேண்டிய ஒரு நிலை வந்திருப்பதை மேற்படி பத்திரிகை விளம்பரம் நமக்கு உணர்த்துகின்றது.
இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால், இது யாழ்ப்பாணத்தில் நிலவும் துறைசார் வெற்றிடங்களைக் காட்டுகிறது என்றும் கூறலாம். அரசியலில் தொடங்கிய ஆன்மீகம்வரை எல்லாவற்றிலுமே வெற்றிடம் நிலவுகிறது. இவ்வாறான துறைசார் ஞானிகளுக்கு பற்றாக்குறை நிலவும் ஒரு சமூக,ஆன்மீகப் பின்னணியில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் தேங்கி நிற்கின்றது. தமிழ்ச் சமூகம் கொந்தளிப்பான கூட்டு உளவியலில் இருந்து விடுபட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.
கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாருடைய காலடியில் தமது பாரத்தை இறக்க முடியும் என்று கூறத்தக்க ஆன்மீக வழிகாட்டிகள் எத்தனை பேர் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் உண்டு?
அல்லது இந்த மதபீடம் சொன்னால்,இந்த சமயத் தலைவர் சொன்னால் அரசியல்வாதிகள் அதைக் கேட்பார்கள் என்று கூறத்தக்க அளவுக்கு ஆன்மீக சக்தியும் நிறுவனப் பலமும் மிக்க எத்தனை மத நிறுவனங்களும் மத தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?
ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அரசியலை ஒரு கூட்டுச் சிகிச்சையாக அணுகுகின்ற அரசியலை ஒரு கூட்டுக் குணமாக்கல் செய்முறையாக முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வழிகாட்டும் ஆன்மீகத் தலைவர்களும்தான். அவ்வாறான தலைவர்களும் துறவிகளும் மிகக்குறைவாக உள்ள ஒரு வெற்றிடத்தில் தமிழ் அரசியல்வாதிகள் யாருக்கும் பயப்படாத,யாருக்கும் பொறுப்பு கூறத் தயாரில்லாத ஒரு விபரீதமான நிலைமை வளர்ந்து வருகிறது. இன்னொரு புறம் சமூகச் சீர்கேடுகளும் பண்பாட்டுச் சீரழிவுகளும் பெருகி வருகின்றன.
இப்படிப்பட்டதோர் ஆன்மீக,அரசியல்,சமூகப் பொருளாதாரப் பின்னணிக்குள் அண்மையில் வெளிவந்த க.போ.த. சாதாரண தர பரிட்சைப் பெறுபேறுகளில் வடக்கு பின்தங்கி விட்டது என்ற விமர்சனங்கள் பூதாகரமாக மேல் எழுகின்றன. அதனால் வடக்கின் மகிமை குன்றிவிட்டது என்று ஒரு பகுதியினர் புலம்பத் தொடங்கி விட்டார்கள்.ஆனால் இத்தனைக்கும் பிரதமர் ஹரிணி, பிள்ளைகளின் அடைவை தனிய பரீட்சைப் பெறு பேறுகளின் மூலம் மட்டும் அளவிட முடியாது என்பதனை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தன்னைக் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு சமூகமாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டம் பரீட்சைப் பெறு பேறுகளை வைத்து தன்னை மதிப்பீடு செய்கிறது.
ஆனால் அதைவிட வேறு பல விடயங்களில் சமூகம் தாழ்ந்து விட்டது என்பதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட விளம்பரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த வீழ்ச்சி அல்லது தாழ்ச்சி ஒன்று மற்றதுடன் தொடர்புடையது. அவற்றை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனை சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். அதற்கு தீர்வும் “கலெக்டிவ்” ஆனதாகவே இருக்க வேண்டும். அரசியலில் தொடங்கி எல்லாத் துறைகளிலும் வெற்றிடம் விழத் தொடங்கிவிட்டது.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளில் துறை சார் ஞானம் மிக்கவர்கள் அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் துறை போனவர்கள் பெரும்பாலும் சன்னியாசிகளைப் போலவே வாழ்வார்கள். தம்மை வெறுத்துப் படிப்பார்கள்;தம்மை ஒறுத்து உழைப்பார்கள். அவர்கள்தான் சமூகத்துக்கு முன்னுதாரணங்கள்.உலகில் தோன்றிய எல்லா மேதைகளின் கதைகளும் அர்ப்பணிப்புகளால் கட்டி எழுப்பப்பட்டவைதான். தத்தமது துறைகளில் அர்ப்பணிப்போடு சன்னியாசிகளைப்போல உழைக்கத் தயாரானவர்களால் மட்டும்தான் ஈழத் தமிழர்களை மீட்க முடியும்.
நிலாந்தன்