முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தவும், மேலும் எவரேனும் சந்தேக நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவுக்காக தனிப்பட்ட பயணமாக லண்டனுக்குச் சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோதும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததால், ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
குறித்த சந்தரப்பத்தில், அன்றைய தினமே அவருக்குப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
