அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனுடன் இணைந்து, வெள்ளியின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வருடாந்த இலாபம்

ஸ்பாட் கோல்ட் (XAU) ஒரு அவுன்ஸ் 1.2 சதவீதம் உயர்ந்து 4,391.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், ஸ்பாட் சில்வர் (XAG) 2.7 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 69.23 டொலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
1979ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் தனது மிகப்பெரிய வருடாந்த இலாபத்தை பதிவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளியின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை 138 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வலுவான முதலீட்டு வரவுகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கத்தை விட வெள்ளி அதிக அளவில் உயர்ந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலும் தங்க விலை திடீர் உயர்வு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதன் தாக்கமாக, இலங்கையிலும் இன்று (23.12.2025) தங்கத்தின் விலை எதிர்பாராத அளவில் உயர்ந்துள்ளது.
இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தகவலின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாய் உயர்ந்து, தற்போது 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி,
• 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் – 44,000 ரூபாய்
• 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் – 40,700 ரூபாய்
என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்வு எதிர்பார்ப்பு
உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
