கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து, தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கம்பளை – புசல்லாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில், குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த பெண், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை சந்திப்பதற்காக நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்கு சென்றுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


இதனையடுத்து கம்பளை பொலிஸார் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.