யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கோரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவன், இளம் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாகப் படுகொலை செய்துள்ளான்.

தாக்குதலில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஆவார். இவர் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வந்துள்ளார். நள்ளிரவு வேளையில் நடந்த இத்தாக்குதலின் போது, பெண்ணின் தலைமுடியையும் கத்தியால் அறுத்து கொடூரமான முறையில் இந்தச் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது தாயாரும் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நிகழ்த்திய பின்னர் அங்கிருந்து தப்பியோடிய கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தேவதாஸ் புகழரசன் என்ற இளைஞன், அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளான்.
இருவரும் ஒரே விடுதியில் சமையல் கலைஞர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்பதால், காதல் விவகாரம் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில் பெண் மறுமணம் செய்யாது தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
