அம்பாறை மாவட்டம், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில், தனது சொந்த இல்லத்தில் உயிர் மாய்த்துக்கொண்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் உடல், உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக புதன்கிழமை (07) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள மாணவன், அதன்பின் தனது பணப்பையிலிருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்தியுள்ளதுடன், தனது கையையும் வெட்டியுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், தனது தாயாரின் சேலையின் உதவியால் வீட்டின் வெளிப்புற மேல் தளத்தில் அவர் உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும், இந்தச் செயலின்போது ஏற்படும் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றைத் தனது வாயில் திணித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .உயிரிழந்த மாணவன் நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தனது தந்தையை இழந்துள்ளார்.
இவரது தந்தையும் தாயாரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதுடன், இவருக்கு இரு சகோதரிகளும் உள்ளனர். தந்தை மறைந்த சோகத்தில் இருந்து குடும்பத்தினர் மீளுமுன் இச்சம்பவம் இடம்பெற்றமை அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளுக்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிபாஸ்டீன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கழுத்தில் ஏற்பட்ட இறுக்கம் காரணமாக மூச்சுக்குழாய் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
