அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16 இன் கீழ் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் பெருமளவான மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் வாழ்க்கைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதனை இன்றளவும் துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான அனர்த்த நிலைமையின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மிக விரைவில் பொறுப்புடன் தலையிட வேண்டும் எனவும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வாழ்க்கையை அனைத்துத் துறைகளிலும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் இதைவிட முறைப்படியான விதத்தில் தலையிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
