வழக்கமான இறக்குமதியாளர்களுக்கான தற்போதைய 3 மாத வாகனப் பதிவு காலத்தை 6 மாதங்களாக நீடிக்கவும், அதேசமயம் தனிப்பட்ட இறக்குமதிகளுக்கான பதிவு காலத்தை ஒரு மாதமாகக் குறைக்க வேண்டும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

வாகனப் பதிவு காலத்தைக் கணக்கிடும்போது, சுங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திகதிக்கு பதிலாக, சுங்க அனுமதி ஆவணத்தில் உள்ள கடவுச்சீட்டு விநியோகத் திகதியை கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
வாகனங்களைச் சுங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எடுக்கும் நேரம் தற்போதுள்ள 3 மாத பதிவு காலத்திற்குள் கணக்கிடப்படுவதால், வாகனங்களை விற்பனைக்குத் தயார் செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்குக் குறைந்த காலமே கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பல பராமரிப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர், ஒரு வாகனத்தை விற்பனையகத்திற்கு கொண்டுவர வழக்கமாக குறைந்தது ஒரு மாதம் ஆகும் என அவர் கூறினார்.
அத்துடன் தனிப்பட்ட வாகன இறக்குமதிகளுக்கு ஒரு மாதப் பதிவு காலத்தை நிர்ணயிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார், ஏனெனில் அத்தகைய வாகனங்கள் மறுவிற்பனைக்காக கொண்டுவரப்படுவதில்லை.
இதன்படி வாகன இறக்குமதி செயல்முறையை சீரமைத்து ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான முன்மொழிவை எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய உரிம முறைமை குறித்து கருத்துத் தெரிவித்த மெரிஞ்சிகே, அங்கீகரிக்கப்படாத நபர்களால் இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் , இதனால் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறிய அளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.