யாழில் தென்னிந்திய பிரபல பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு இன்றையதினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஊடக சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு நிதியை சேகரிக்கும் முகமாக இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்துவதற்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அந்த இசை நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பிரபல பாடகர் சிறீனிவாஸ் மற்றும் தென்னிந்திய பாடகர் குழுவினரை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்தான ஊடக சந்திப்பார் து, பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்வாகத்தினரால் சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இசை நிகழ்ச்சி குறித்தும், டிக்கெட்டுகள் விற்பனை குறித்தும் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது.
மருத்துவ பீடத்திற்கு தேவையான பேருந்தினை வாங்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டால் குறித்த செய்திக்கு ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் முன்னுரிமை வழங்கினர்.
இந்நிலையில் இன்றையதினம் பாடகர் சிறீனிவாஸ் குழுவினர் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தடைந்த பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த ஊடக சந்திப்பில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் சென்ற நிலையில் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 5 ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.
டிக்கெட்டுகள் விற்பனை செய்யும்வரை அனைத்து ஊடகங்களினதும், அனைத்து ஊடகவியலாளர்களினதும் பங்களிப்பும், ஆதரவும் தேவை என்றும், டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டு குழு கூறுவது ஊடகங்கள் மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்துகிறது.
செய்தி – பு.கஜிந்தன்