கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஷார்ஜாவில் தனது ஒரு வயது மகளுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 32 வயது பெண் விபன்சிகா. இவருக்கும் நிதீஷ் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.
பின்னர் இருவரும் ஷார்ஜாவில் குடியேறினர். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. ஆனால் நிதீஷிற்கும், விபின்சிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் விபன்சிகாவும், அவரது ஒரு வயது மகளும் கடந்த 8ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது குழந்தை சுவாசம் தடைபட்டு இறந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரிய வந்தது. மேலும், விபன்சிகா எழுதிய குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அதில் மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கிடையில், விபன்சிகாவின் பெற்றோர் கேரள பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விபன்சிகாவின் தாய் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறும்போது, திருமணம் முடிந்ததும் வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக நிதீஷ் தொல்லை கொடுத்ததாகவும், அவர் அழகாக இருந்ததால் அவரை மொட்டை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபன்சிகாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தாயார் ஷார்ஜாவுக்கு கிளம்ப உள்ளார்.