கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, கடைகள் ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடி கொண்ட பொலிதீன் பைகளுக்கு ஒரு விலையை அறவிட வேண்டும்.
பொலிதீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், பொலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம்,
இனிமேல் வர்த்தக நிலையங்களில் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “பாவனையாளர்களுக்கு வர்த்தக நிலையங்களால் வழங்கப்படும் கைப்பிடி கொண்ட ‘சிலி சிலி’ பைகளுக்காக ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, நவம்பர் முதலாம் திகதி முதல் ‘சிலி சிலி’ பைகளை இலவசமாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக நிலையங்களால் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது.” “சூழலைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்பது பாவனையாளரின் கடமையாகும். ஒரு கடைக்கு பொருட்களை வாங்கச் செல்லும் போது, அதற்கு பொருத்தமான பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
