வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், நேற்று வல்வெட்டித்துறை காவல்துறை நிலையத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இதனை மையப்படுத்தி, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான கந்தசாமி சதீஸ், காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் குறித்த வழக்கை நாளை புதன்கிழமை வரை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கும் நாளை வரை நீதிவான் தடை விதித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
