அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி (Buying Rate) மீண்டும் ரூ. 300 என்ற நிலையைத் தொட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதிக்குப் பின்னர், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 300ஐத் தொட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வங்கி அல்லாத பரிவர்த்தனை நிலையங்களில் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த திடீர் உயர்வு பொருளாதாரச் சவால்களின் தொடர்ச்சியைக் காட்டுவதாகவும் நிதித்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 360-370 ஐத் தாண்டி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு நாணய வரவுகள் காரணமாக ரூபாய் படிப்படியாக பலம் பெறத் தொடங்கியது.
இதன் விளைவாக, டொலரின் கொள்முதல் பெறுமதி சுமார் ரூ. 290 என்ற அளவுக்குக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
