யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குப் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்றிருக்கும் வட்டுக்கோட்டைத் துணவி சிவன் ஆலயம்

பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வரும் திரு.க.ஜெகதீஸ்வரன் அவர்கள் 2013 காலப்பகுதியில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் வட்டுக்கோட்டைத் துணவி கிராமத்தில் பாழடைந்த ஆலயமும், அதன் பின்பக்கச் சுவரில் புரியாத எழுத்துப் பொறிப்புக்களும் இருப்பதாக எம்மிடம் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான செல்வி. பு.றாகினி. செல்வி வீ.சிவரூபி. திரு .ப கபிலன். திரு.வி.மணிமாறன் மற்றும் பல்கலைக்கழக தொல்லியல் விரிவுரையாளரான செல்வி சசிதா குமாரதேவன் ஆகியோருடன் இணைந்து இவ்விடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த ஆய்வுக்கான ஒழுங்குகளைச் சங்கானை பிரதேச செயலாளர் தி.ரு. சோதிநாதன் அவர்களும். சங்கரத்தை கிராம உத்தியோகத்தர் திரு. சிவகுமார் அவர்களும் ஏற்படுத்தி தந்தனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு வந்த ஆலயமே இன்று பழமை மாறாத நிலையில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு தொல்லியல் திணைக்களத்தால் இலங்கையின்; தேசிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வடஇலங்கையில் தலைநிமிர்ந்து நிற்கப்போகும் யாழ்ப்பாண இராசதானி கால முக்கிய மரபுரிமைச் சின்னம் என்ற பெயரை இவ்வாலயம் பெறுவது தமிழ் மக்களுக்கும். சிவ பக்தர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

வடஇலங்கையில் வரலாற்றுத் தொன்மையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட பிரந்தியங்களில் ஒன்றாக வலிகாமம் காணப்படுகின்றது.

இலங்கையின் பூர்வீக மக்கள் குடியிருப்ப்புக்களைக் கொண்டிருந்த முக்கிய இடங்களாக வலிகாமத்தில் உள்ள கந்தரோடையும், ஆனைக்கோட்டையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு பதிலாக வலிகாமம் என்ற பெயரே வடஇலங்கையின் முக்கிய பிராந்தியமாக பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களிலும், தமிழ், சிங்களக் கல்வெட்டுக்களிலும் கூறப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாண அரசுகால நிர்வாகப் பிரிவில் வலிகாமமே பெரிய நிர்வாகப் பிரிவாகவும் இருந்துள்ளது. வடஇலங்கையில் ஐரோப்பியர் காலப் பண்பாட்டை முதலில் உள்வாங்கிய பிராந்தியமாக வலிகாமம் காணப்பட்டாலும் ஐரோப்பிய பண்பாட்டுக்கு எதிரான சுதேச பாரம்பரிய பண்பாட்டின் மீள் உருவாக்கம் தோன்றவும் வலிகாமம் காரணமாக இருந்துள்ளது.

ஆயினும் கடந்த 30 ஆண்டுகால அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து வாழ்ந்த எம் மக்கள் மீளவும் தமது இருப்பிடம் திரும்பிய போது தமது இடப்பிடத்திற்கு முன்னர் தமது குலதெய்வத்திற்கான ஆலயத்தை மீளக்கட்டி அழகுபார்த்த பெருமைக்கு உரியவர்கள். அப்படியிருந்தும் வரலாற்றுப் பழமைவாய்ந்த துணவி கிராமத்தில் காணப்படும் சிவன் ஆலயமும், விநாயகர் ஆலயமும் யுத்த அனர்த்தத்திற்கு முன்னரே முழுமையாக அழிவடைந்திருந்தும் அவை ஏன் மீள்புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

இவ்வாலயங்கள் தோன்றிய காலம், தோற்றுவித்தவர்கள், இது சமாதிகோயிலா? அல்லது சிவனுக்குரிய தனி ஆலயமா?; முழுமையாக ஆகம மரபில் கட்டப்பட்டதா? ஆகம மரபு சாராததா? ஏன் அழிவடைந்தது தொடர்பாக அங்கு வாழும் ஊர்ப்;பெயவர்கள், சமயப்பெரியார்கள், மத குருமார், ஆலயங்கள் தொடர்பான வாய்மொழி வரலாற்றுக் கதைகள், தொல்பொருள் சார்ந்த நம்பகரமான சான்றுகள் என்பவற்றிற்கு இடையே வேறுபட்ட தகவல்களும், கருத்துக்களும் காணப்படுகின்றன.

இவை எதிர்காலத்தில் மேலும் விரிவாக ஆராயப்படவேண்டியவை. இருப்பினும் இன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் துணவி சிவன் ஆலயத்திற்கு தொன்மையான நீண்ட வரலாறு இருப்பதையும், அவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னமாக ஏன் பிரகடன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களையும் வெளிப்படுத்துவதை எமது கடமையாகக் கருதுகின்றோம்.

தென்னிந்திய ஆலயங்களின் தோற்ற காலத்தையும், அவற்றின் வரலாற்றையும் விஞ்ஞானபூர்வமாக எடுத்துக் கூறுவதற்கு ஆலயங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஆனால் யாழ்ப்பாண ஆலயங்களில் அதுவும் பழமையான ஆலயங்களில் அரிதாகத் தானும் இதுவரை கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முதன்முதலாகத் துணவி சிவன் ஆலயத்தின் கிழக்குப்பக்க கர்ப்பக்கிரகச் சுவரில் கிரந்த எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கிரந்தக் கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி.15 ஆம்-16 ஆம் நூற்றாண்டை அதாவது இற்றைக்கு நானுறு ஆண்டுகளுக்கு முற்பட்டதென இலங்கை, தமிழக கல்வெட்டு அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் இவ்வாலயத்தை யாழ்ப்பாண இராசதானி காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு.

இக்கல்வெட்டில்தான் இவ்வாலயத்தின் பெயர் பிரகேஷ்வரன் எனக் கூறப்பட்டிருப்பது முக்கிய வரலாற்றுத் தகவலாகும். இடைக்கால இலங்கை, தென்னிந்தியக் கல்வெட்டுக்களில் ஆலயத்தின் பெயரைக்; கல்வெட்டில் கூறும் மரபு இருந்துள்ளது. அவற்றில் சிவனை முக்கிய தெய்வமாகக் கொண்ட ஆலயங்கள் பலவற்றின் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பிரகேஷ்வரன், பிரகதீஷ்வரர் என்பன இடைக்காலத்தில் சிவனைக் குறித்த முக்கிய பெயர்களாகும். அப்பெயர் துணவி சிவன் ஆலயக் கல்வெட்டிலும் இடம்பெற்றிருப்பது அதன் பழமைக்கு இன்னொரு சான்றாகும்.

இவ்வாலயம் அமைந்துள்ள இடம் துணவி என அழைக்கப்படுகின்றது. ஆனால் சுண்ணாகம் குமாரசாமி புலவரது 1889 ஆம் ஆண்டுக்குரிய ஊஞ்சல் பாட்டில் இவ்விடம் துணைவை என்றே கூறப்பட்டுள்ளது. இப்பெயர் பரந்த பிரதேசத்தில் உள்ள சிறிய நிர்வாக வட்டாரத்தைக் குறித்திருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றது. இப்பெயரே காலப்போக்கில் துணவி என்ற பெயராக மாற்றமடைந்திருக்கலாம். இப்பெயர் துணவியின் தொன்மையையும், தனித்துவத்தையும் அடையாளப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாலயம் ஏறத்தாழ 50 அடி நீளமும், 42 அடி அகலமும் கொண்டது. ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் 6அடி நீளமும் 4 ½ அகலமும் கொண்டது. ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தைத் தவிர அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில்கள், மடங்கள் என்பன பெரும்பாலும் அழிவடைந்த நிலையிலேயே காணப்பட்டன. ஆலயத்தின் பெரும்பகுதி கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறல் கற்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் கர்ப்பக்கிரகம் மட்டும் பொழிந்த முருகைக் கற்களையும் சுண்ணாம்புக் கற்களையும் கொண்டு கட்டப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன. பொதுவாக இவ்வாலயத்தின் கட்டுமானமும் கலைமரபும் ஏனைய தமிழக, இலங்கை ஆலயங்களுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தன. சில இடங்களில் ஆகம மரபு காணப்படுகின்றன. வேறுசில இடங்களில் கிராமிய ஆலயச் சாயல் காணப்படுகின்றன. ஆலயத்தின் உயரம் குறைந்த பதிவான வடிவமைப்பு, புதுவகையான கூரை அமைப்புக்கள், அகன்ற உயரமான சுற்று ,வாசல் பகுதிகள் யன்னல்கள் முதலியன மக்கள் வாழ்விடங்களுடனும், ஆலயக் கட்டுமானங்களுடனனும் தொடர்புபட்டவையாக உள்ளன. சில கட்டிட அம்சங்கள் கேரள ஆலய அமைப்பை பிரதிபலிப்பனவாக உள்ளன. இவை துணவிச் சிவன் ஆலயத்தின் தனித்துவத்தை மட்டுமன்றி அதன் தொன்மை வரலாற்றையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.

மரபுரிமை என்பது இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெறுமதியுடைய சின்னங்களைக் குறிப்பதாகும். துணவிச் சிவன் ஆலயம் காலத்தால் பல தலமுறை தாண்டிய விலைமதிக்க முடியாத ஒரு சொத்து. அது ஒரு இனத்தின், ஒரு மதத்தின் அடையாளம். அதுவே எதிர்காலச் சந்ததியின் நம்பிக்கை நாற்று. ஆகவே அவ்வாலயம் இன்று பழையநிலையை நினைவுபடுத்தி புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும்.

இவ்வாலயம் 2013 ஆண்டிலிருந்து அவ்வப்போது ஆய்வு செய்வதற்கு துணையாக இருந்து ஊக்கப்படுத்தி வந்தவர் என் அருமை நண்பர் பேராசிரியர் ம.சரவணபவ ஐயர் அவர்கள். அவரே இன்று இவ்வாலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் வைத்திய கலாநிதி சிவயோகநாதன் அவர்களையும், அவர் குடும்பத்தாரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். கைதடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவரது குடும்பத்தினர் தமிழ் மொழி மீதும், சைவத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். விளம்பரமின்றி இவ்வாலயப் புனரமைப்பிற்கு வேண்டிய நிதியை அவ்வப்போது யாழ்ப்பாண மரபுரிமை மையத்திற்கு வழங்கியவர். 2021 ஆண்டு யாழ்ப்பாண நகர முதல்வர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் இணைந்து யாழ்ப்பாண மரபுரிமை மையத்தைத் தொடங்கிய போது சங்கிலியன் தோரணவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு வேண்டிய முழு நிதியையும் நன்கொடையாகத் தந்தவர் வைத்திய கலாநிதி பேராசிரியர் ரவிராஜ் அவர்கள். இன்று துணவி சிவன் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு வேண்டிய முழு நிதியையும் நன்கொடையாக வழங்கியவர் பேராசிரியர் ரவிராஜ் அவர்களின் சகலனான வைத்திய கலாநிதி சிவயோகநாதன் அவர்கள் என்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் தமிழ்ச் சமூகம் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பர்.

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்- யாழ்ப்பாண மரபுரிமை மையம்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (14)
இலங்கையை உலுக்கிய வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!
New Project t (3)
ரணிலை விக்ரமசிங்கவை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!
New Project t (12)
இந்தியாவில் இருந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்!
New Project t (12)
நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை!
New Project t (11)
இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி தீவிர விசாரணை
ranil-rishard sumu
ரணில் வீட்டிலா சுமந்திரன்!