கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு உதவிய ஆனந்தன் என்பவரின் வீட்டில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனந்தன் வழங்கிய தகவலுக்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிஸ்டல் ரக துப்பாக்கிகள் இரண்டும் 9 மி.மீ ரக தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன், ஆனந்தன் என்பவருக்கு துப்பாக்கியை கொடுத்ததாக கூறப்படும் நபரொருவரும் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
