டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“கிரீன்லாந்தை வாங்குவது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்து வருகிறார். ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இது அமெரிக்காவிற்கு மிக அவசியமானது,” என்று வெள்ளை மாளிகை ஊடக பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் சமீபத்தில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கிரீன்லாந்தைப் பெறுவதற்கும் இராணுவ பலத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன, ஆனால் ட்ரம்பின் முதல் தேர்வு பேச்சுவார்த்தை மட்டுமே” என்று லெவிட் பதிலளித்தார்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் டென்மார்க்கின் ஒரு பகுதியை அமெரிக்கா ஆக்கிரமிக்க முயல்வது அல்லது வாங்குவது சர்வதேச விதிகளை மீறும் செயல் என பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
