A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில், கடமையில் இருந்த பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்துச் சட்டவிரோத மணலைக் கடத்த முயன்ற 6 டிப்பர் வாகனச் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (19.08.2026) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, சந்தேக நபர்களிடமிருந்த 5 டிப்பர் வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி A9 பிரதான வீதி பரந்தன் சந்தியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களைச் சோதனையிட்ட போது, பொலிஸாரின் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகச் சாரதிகள் அவர்களுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், லஞ்சம் கொடுக்க முயன்ற 6 சாரதிகளையும் கைது செய்ததுடன், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் இன்றைய தினமே நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
