தமிழ்நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்துவதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வார காலம் கழித்துத்தான் OTT-யில் வெளியிடப்படும் என்ற கடிதத்தைத் தயாரிப்பாளர்கள் வழங்கினால் மட்டுமே, அந்தப் படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிப்போம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ள நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களின் வெளியீடு நிறுத்தப்படுவதோடு, அனைத்துவிதமான திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் தயாரிப்பு பணிகள் (Post-production) முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளன.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி முடிவினால் ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களில் இல்லாத நடைமுறை தமிழ்நாட்டில் மட்டும் திணிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
