ஏமன் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏமனில் உள்ள அப்யான் மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் புலம் பெயர்ந்தோர் 154 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் மீட்பு பணியில், தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில், தண்ணீரில் மூழ்கி அகதிகள் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 74 பேர் மாயமாகி உள்ளனர்.
இது குறித்து, மாகாணத்தின் மூத்த சுகாதார அதிகாரி அப்துல் காதிர் பஜமீல் தெரிவித்துள்ளதாவது, “இதுவரை 12 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒன்பது பேர் எத்தியோப்பிய நாட்டினர். ஒருவர் ஏமன் நாட்டவர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பிரிக்காவின் கொம்புக்கும் ஏமனுக்கும் இடையிலான கடல் பாதையின் ஆபத்துகள் குறித்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு பலமுறை எச்சரித்து உள்ளது.
பெரும்பாலும் எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர், வேலை தேடி சவுதி அரேபியா அல்லது பிற வளைகுடா நாடுகளுக்கு செல்ல முயன்று கடலை கடக்க முயற்சி செய்யும் போது விபத்து நிகழ்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.