முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்தர் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் இன்றையதினம் (26) பிணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் ஒட்டிசுட்டான் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் குறித்த வழக்கு 26.08.2025 ம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று (26.08.2025) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் தலைமையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது சட்டத்தரணி கெங்காதரன் தலைமையிலான நான்கு சட்டத்தரணிகள் அவர்கள் உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக நியாயங்களை முன்வைத்திருந்தனர்
தொடர்ந்து இராணுவத்தினருக்கான பிணை கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த நான்கு இராணுவத்தினரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு இராணுவத்தினருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 30.09.2025 அன்று திகதியிடப்பட்டுள்ளது.