உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திரா (வயது 40). இவருடைய இளைய சகோதரர் சுனில்.
இந்நிலையில், சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை வீசி சென்றுள்ளார். இதனைக் கவனித்த வீரேந்திரா அவரை கண்டித்துள்ளார்.
இதுபற்றித் தெரிய வந்ததும், சுனில் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சுனில், வீட்டில் இருந்து கோடரியை எடுத்து வந்து வீரேந்திராவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அப்போது சுனிலின் மனைவி குட்டோவும் கம்புகளால் வீரேந்திராவைத் தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த வீரேந்திரா, உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், மீரட் நகருக்கு உயர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
இதுபற்றி வீரேந்திரா மனைவி சஞ்சல், தாக்குதல் நடத்திய சுனில், அவருடைய மனைவி குட்டோ ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்குப் பின்பு அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.