சுங்கச் சோதனையின்றி விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படவுள்ள விசேட குழுவுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரை இந்தக் குழுவிற்கு நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது குறித்து விசாரிக்க இந்த விசேட நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு, விரைவில் கூடி நடவடிக்கை எடுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் கயந்த கருணாதிலக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விசேட நாடாளுமன்றக் குழுவுக்காக ஆளும் கட்சியினால் எட்டு பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
