வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, சமூக வலைத்தளமான எக்ஸ் இல், “கராகஸ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது” என பதிவிட்டதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் குறைந்தது ஏழு வெடிப்புகள் பதிவானதாக வெளிநாட்டு செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடியதாகவும் கூறப்படுகிறது.
நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பதாவது, கராகஸின் மையப் பகுதியில் உள்ள லா கார்லோட்டா இராணுவ விமானத் தளம், மேலும் அதிக பாதுகாப்பு கொண்ட ஃபூர்டே டியூனா இராணுவ முகாம் ஆகிய இடங்களில் இருந்து புகை எழுந்ததாக தெரிவித்துள்ளனர். இதேபோல், கராகஸின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹிகுவேரோட்டே விமான நிலையமும் தாக்குதலுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெனிசுலா அரசு இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த ஐந்து மாதங்களாக வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீது அமெரிக்கா கடுமையான அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார தடைகள், கடற்படை நடவடிக்கைகள், எண்ணெய் கப்பல்களின் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வெனிசுலாவை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகள் தொடர்ந்துவரும் நிலையில், இந்த தாக்குதல்கள் இலத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
