தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டமையானது, இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (09) இரவு 9.10 மணியளவில் தெஹிவளைப் பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் மீது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய “சனா மாமா” என அழைக்கப்படும் ஏ.டி. சனத் பாலசூரிய ஆரச்சி என்பவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது ஹோட்டலினுள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்களில் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தகவல் கிடைத்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட நபர், பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் “சூவா சமந்த” (Chuwa Samantha) என்பவரின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.
மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க” (Badovita Asanka) மற்றும் “சூவா சமந்த” ஆகியோரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான பகையே இக்கொலைக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, படோவிட்ட அசங்கவின் தரப்பினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், கொலை செய்யப்பட்ட “சனா மாமா” என்ற சனத் இதற்கு முன்னர் எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இருந்திருக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
