இலங்கை பெட்ரோலியம் முனைய நிறுவனம் 17 ஆம் திகதி சனிக்கிழமை பெட்ரோலிய பொருட்களை விநியோகிப்பதில்லை என முடிவு செய்துள்ளதால், எதிர்வரும் வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெட்ரோலிய விநியோகத்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியம் முனைய நிறுவனம் 17 ஆம் திகதி சனிக்கிழமை மூடப்படுவதால், 16 ஆம் திகதிக்குள் வார இறுதிக்கான போதுமான எரிபொருள் இருப்பு பதிவுகளை வழங்குமாறு பிராந்திய பெட்ரோலிய மேலாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
இதற்கான பணத்தினை தவணையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை நிறுத்தும் நோக்கில் சனிக்கிழமை நிறுவனம் மூடப்படுவதாக விநியோகத்தர்கள் சங்கம் கூறுகின்றது.
இந்நிலையில், சில நாட்களுக்கு எரிபொருளைப் பெறுவதற்கு அதிக அளவு பணத்தை செலவிட முடியாது என்றும், வார இறுதிக்கான எரிபொருள் பதிவு (ஆர்டர்களை) முன்கூட்டியே செய்ய முடியாது என்றும் விநியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அடுத்த வார இறுதியில் பெரும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதன் டீலர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடியை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குத் தேவையான எரிபொருளை மொத்தமாக செலுத்தி வாங்க முடியாமல் தவிப்பதாகவும் சங்கம் கூறுகிறது.
இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதற்கு இலங்கை பெட்ரோலிய முனைய நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
