கிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை

நுவெரலியா – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானது என விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்ட விசாரணகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்த நிலையில், டிக்கோயா வைத்தியசாலையில் பெண்ணின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது, வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பிணவறைக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து மலையகத்தின் பிரபல அரசியற் கட்சியின் ஆதரவாளர்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல் மீது அங்கிருந்த ஊழியர்கள் உடலுறவு கொண்டதாக தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

போராட்டங்களை தொடர்ந்து நுவெரலியா மாவட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விவகாரம் பற்றி பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்ததோடு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இதுபற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.

கடந்த மாதம் பெப்ரவரி 23ஆம் திகதி திங்கட்கிழமை உயிர்மாய்த்த பெண்ணின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அவருக்கு மறுநாள் 24ஆம் திகதி பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  

எவ்வாறாயினும் 25ஆம் திகதி புதன்கிழமை  பிணவறைக்கு பொறுப்பான வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ”பெண்ணின் உடலை பிணவறையில் இரவு வைத்திருந்த இடத்துக்கும் மறுநாள் காலையில் பெண்ணின் உடல் இருந்த இடத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தன” என டிக்கோயா வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் 27ஆம் திகதி வெளிக்கிழமை மூவரடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு, பிணவறை பகுதியின் சிசிடிவி காட்சிகளை அந்த குழு ஆராய்ந்ததில் சந்தேகத்துக்கு இடமான விடயம் ஒன்றை அவதானித்தனர்.

அதாவது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் இரவு நேரத்தில் மூன்று தடவகைள் பிணவறைக்குள் சென்று வந்திருப்பது  சிசிடிவி வீடியோவில் தெரியவந்துள்ளது. முதல்முறை செல்லும்போது ஒரு ஊழியர் தனியாக பிணவறைக்கு சென்று வருவதும் பின்னர் ஏனைய இருவரை பிணவறைக்கு அழைத்துக்கொண்டு மூவருமாக செல்வதும், பின்னர் மீண்டும் இரவில் முதலாவதாக சென்றிருந்த நபர் இறுதியாக உள்ளே சென்று வருவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. 

மூன்று தடவைகள் பிணவறையின் உள்ளே வைத்தியசாலையின் ஊழியர்கள் சென்றிருந்தாலும் சில வினாடிகளிலேயே அவர்கள் வெளியே வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே,  குற்றச்சாட்டப்படுவது போல இறந்த பெண்ணின் உடல்மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், சில வினாடிகளுக்குள் உள்ளே சென்ற ஊழியர்கள் திரும்பி வெளியே வந்தது எவ்வாறு  என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து பிணவறைக்கு முதல்முறை சென்றிருந்த சிற்றூழியரை காணவில்லை எனவும் அவர் பற்றிய தகவல் இல்லை எனவும் இவரை பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் வைத்திய அதிகாரி மொஹமட் பாரூக் மொஹமட் பஸ்லி தெரிவித்தார். 

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் ஏனைய இரு ஊழியர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளின் முடிவில், பிணவறைக்கு செல்ல அவசியமில்லாத ஊழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பிணவறைக்கு சென்றது தவறு என்றும் ஆனால், பெண்ணின் உடலை வைத்தியசாலையின் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என தெரியவந்திருப்பதாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பிணவரையில் 6 உடல்களை குளிரூட்டியில் ஒரே தடவையில் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இருந்தும், உயிரிழந்த பெண்ணின் உடலை பிணவறைக்குப் பொறுப்பான வைத்தியசாலையின் ஊழியர் தரையில் வைத்திருந்தது தவறு எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

வைத்தியசாலையின் உள்ளக விசாரணைகளுக்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியரடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

அந்த விசாரணைகளின்போதும் இறந்த பெண்ணின் உடல்மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொண்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களும் கண்டறியப்படவில்லை என குழுவின் விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும் பெண்ணின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மறுநாளே அதாவது வைத்தியசாலையின் ஊழியர்கள் இரவு நேரத்தில் உள்ளே சென்று வந்திருந்த மறுநாளே சட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரேத பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த பரிசோதனை அறிக்கையிலும் பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டிருந்தமைக்கான சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு சாட்சியங்களும் கண்டறியப் பட்டிருக்கவில்லை எனவும் அந்த விசேட வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலைக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களால் வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அலுவலகத்துக்கு டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்கள் மீது முன்வைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, பெண்ணின் உடல்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறயினும் உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் இச்சம்பவம் பற்றி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!